Sunday, December 15, 2019

சித்த மருத்துவத்தில் பத்தியம்💐

*சித்த மருத்துவத்தில் பத்தியம்*

சித்த மருத்துவத்தில் பத்தியம், இச்சா பத்தியம், கடும்பத்தியம், மிகக் கடும் பத்தியம், உப்பில்லா பத்தியம் என பல தரப்படும்.

*இச்சாபத்தியம் :*

கடுகு, நல்லெண்ணெய் , வெண்பூசணி, பரங்கி, மாங்காய், பலா, தேங்காய், பெருங்காயம், வெ. பூண்டு, அகத்தி, புகைத்தல், போதைப் பொருள், உடலுறவு, பகல் தூக்கம், வெயிலில் திரிதல் ஆகியவற்றை விலக்கி பிறவற்றையும் விரும்பாமல் மிகுதியாக உண்ணாதிருத்தலே இச்சாபத்தியமாம்.

*கடும்பத்தியம் :*

 கடும்பத்தியத்தில் மருந்துண்ணுங்காலம் வரை மேற்கண்ட பொருள்களை விலக்குவதோடு உப்பு, புளி, காரம் நீக்கியும் உணவுண்டு மருந்து நிறுத்திய பின்னும் மருந்துண்ட நாள்களுக்குச் சமமான நாள்கள் புளியைச் சுட்டுச் சேர்த்து கத்தரிப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, ஆகியவற்றால் குழம்பு, கறி முதலியன செய்து மறு பத்தியமாகக் கொள்ளலாம்.

*மிகக்கடும்பத்தியம் :*

 புதிய மட்கலத்தில் (மண்பானை) அரிசியை உப்பின்றிப் பொங்கியுண்ண வேண்டும். பிற எதுவும் ஆகா. சில மருந்துகள் சாப்பிடும் போது வாழையிலையில் உண்ணுதல், நெல்லாவியில் படுதல், கடற்காற்றில் உலாவுதல், புளியமர நிழலில் இருத்தல், புளி, உப்பு, ஆகியவற்றை தொடுதல், உணர்ச்சிவயப்படுத்தல் முதலியவையும் தவிர்க்கவும்.

*உப்பில்லாபத்தியம் :*

 பாதரசத்தை தனித்தோ, பற்ப செந்தூரமாகவோ பிற மருந்துகளுடனோ, உண்ணும் போதும் மருந்து நிறுத்திய பின்னும் மருந்துண்ட நாள் அளவு மறுபத்தியம் காத்தல் வேண்டும். *பின்னர் உப்பை வறுத்துச் சேர்த்தும்* அதன் பின்னர் ஓமம், மிளகு, முக்கூட்டு நெய், ஆவின் நெய், இவற்றில் ஏதேனும் ஒன்றால் தலை முழுகிய பின்னரே உப்பு சேர்த்து உண்ணலாம். இவ்வாறு கடைப்பிடித்தலே உப்பில்லா பத்தியமாகும்.

*சில மருந்துகளுக்கு பத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தாலும் இச்சா பத்தியமாகவேனும் இருந்தால் பிணி விரைவில் நீங்கும்.*